திருச்சிற்றம்பலம்.
திருக்கோவில் வழிபாட்டு முறை.
திருக்கோயிலுக்கு எவ்வாறு போதல் வேண்டும்?
குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் விளக்கு, புஷ்பம் போன்ற வழிபாட்டுப் பொருள்களை ஏந்திச் செல்லல் வேண்டும். வழிபட்டுப் பொருட்களை இடுப்புக்கு மேல் தூய்மையாக ஏந்திச் செல்லவேண்டும்.
திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?
தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.
திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.
எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?
ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.
ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்
எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?
மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
Comments