தனது பாடத்தில் ஆஸ்திரேலிய கங்காருவையும் பஞ்சாப் பொற்கோயிலையும் வரிந்துகட்டிப் படித்து ஐந்து மார்க், பத்து மார்க் வாங்கும் ஒரு குழந்தைக்கு உள்ளூரின் சிறப்பும் சொந்த ஊரின் சமூகநிலை பற்றிய சிந்தனையையும் வளர்க்க நமது கல்வியால், முடியவில்லை. அதற்கு நேரமில்லை. அது நடக்காதவரை கல்வி வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ தான் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? உலக வரைபடத்தில் கனடா எங்கே இருக்கிறது என்று தெரிந்திருப்பதைவிடத் தன் சொந்த ஊரில் ‘உழவர் சந்தை’ எங்கேயிருக்கிறது என தெரிந்திருப்பது முக்கியமில்லையா?
கணக்கில் 100-க்கு 100 வாங்கினாலும் காய்கறிக் கடையில் மீதிச் சில்லறையைக் கணக்குப் பண்ணி வாங்கத் தெரியாது என்றால் சமூகத்தோடு கலக்கும் அனுபவங்களை ஒரு குழந்தை பெறவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது? அதற்கு பள்ளிக்கல்வியும் வீடும் கைகுலுக்கும் ஒரு புள்ளி கண்டிப்பாகத் தேவை. வகுப்பறை அறிவை மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துத் தரும் கல்விதான் வெறும் பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளராக மாணவரை மாற்றும். அறிந்ததிலிருந்து அறியாததற்கு, எளிதிலிருந்து கடினமானதற்கு என்பது கல்வியில் எவ்வளவு முக்கியமோ அதேபோல உள்ளூர் அறிவிலிருந்து உலக அறிவுக்கு என்பதும் ஒரு கொள்கை ஆக்கப்பட வேண்டும். அதுவே முழுமையான கல்வி...
வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் மட்டுமே கல்வி எனப் பொதுவாக உலகம் நம்பியபோது 1960-களில் ஆஸ்திரியக் கல்வியாளர் இவான் இலிச் போன்றவர்களால் ‘முழுமையான கல்வி’ வளர்த்தெடுக்கப்பட்டது. பொதுவான கல்விக்கு மாற்றாக மனித உறவுகள், பொறுப்புணர்ச்சி, பரஸ்பர மதிப்புணர்வு ஆகியவையே உண்மையான கல்வியின் அடையாளம் என இவான் இலிச் அறிவித்தார்.
கல்வியைப் பள்ளி எனும் கட்டிடத்திலிருந்து திறந்தவெளி நோக்கி அவர் நகர்த்தினார். ஒரே மாதிரி அன்றாடச் செயல்பாடுகளை தினமும் இயந்திரம் போல அனுசரித்துக் கற்றலை சராசரிக் கல்வி குறுக்கிவிடுகிறது. அந்தக் கல்வியால் சமூகத்துக்கு எந்தப் பலனும் கிடையாது என்பது அவரது கருத்து. குழந்தைகளை அவரவர் வயதுக்கேற்ப சுதந்திரமாய் ஊர் சுற்றவும் தான் விரும்புவதைச் செய்யவும் வாரத்துக்குச் சில மணி நேரங்கள் அனுமதிப்பது இலிச்சின் கல்வியின் ஒரு அம்சம். தாங்களாகவே குழுக்களாகவோ தனியாகவோ சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது ஊர் விழாக்களில் ஏதாவது ஒரு பங்களிப்பை நிகழ்த்துவது இவை பள்ளியின் செயல்பாடுகளை விட அதிகமான பாடங்களைக் குழந்தைகளுக்கு வழங்கும் என்பது இலிச்சின் நிலைப்பாடு.
திருமண வைபவங்களில் பங்கேற்பதும் இறந்தவர் வீடுகளின் பணிகளில் இணைவதும் சமூகக் கல்வியின் சாரம் என்றார் அவர். இலிச் முன் வைக்கும் கல்வி மூலம் உருவாகும் ஒரு சந்ததி நீர்நிலைகள் அழிவதையும் தனது பகுதியில் விவசாய நிலங்கள் எல்லாம் குடியிருப்புகள் ஆவதையும் வேடிக்கை பார்க்காது என்பதே உண்மை
Comments